விவசாயம்

நான் அடிப்படையில் விவசாய குடும்பத்தை சார்ந்தவன். தற்போது நான் தனியார் பிரிண்டிங் மேனேஜர் ஆக பணிபுரிகிறேன், எனது பெற்றோர் விவசாயம் செய்கிறார்கள். எனது பெற்றோரின் விருப்பத்திற்கு இணங்க வேலைக்கு செல்கிறேன்.ஏன் இதை சொல்கிறேன் என்றால் விவசாய பின்னணியில் இருந்து கொண்டு என் போன்றவர்கள் பலர் விவசாயம் செய்யாமல் வேறு வேறு வேலைகளுக்கு செல்கின்றனர்.
அதற்கு காரணங்கள் பல உண்டு. இன்றைய பொருளாதார சூழலில் மக்களுக்கு அதிக வருமானம் தேவைப்படுகிறது. அது விவசாயத்தில் கிடைக்காது என்ற எண்ணம் தான் காரணம். எந்த ஒரு தொழிலுலிம் இடர்பாடுகள் இல்லாமல் இல்லை. ஆனால் விவசாயத்தில் பல இடர்கள் உள்ளதால் அதை செய்யவே பலர் தயங்குகின்றனர். இன்றைய விவசாய குடும்ப பெற்றோர்கள் தங்களோடு இந்த கஷ்டம் போகட்டும் எண்ணத்திலும் தன் பிள்ளைகள் வெளியில் வேலைக்கு சென்றாவது நல்லபடியாக இருக்கட்டும் என்றும் தங்களோடு விவசாய நெறிமுறைகளை நிறுத்திக்கொள்கின்றனர். தற்போதைய சந்ததியினர் அதை அறிந்து கொள்ள விளைவதும் இல்லை.
ஏன் இந்த நிலை.? பருவமழைகளை நம்பியே விவசாயம் நடக்கும் நம் நாட்டில் சுற்றுச்சூழல் மாற்றத்தால் எப்போது மழை வரும் போகும் என்று தெரியாத நிலை. கடனுக்கு வாங்கி விவசாயம் செய்யும் போது வெள்ளம், மழை பொய்ப்பு போன்றவற்றால் நட்டம் அடைந்து தற்கொலை செய்து கொள்ளும் சூழல் அதிகமாகி வருகிறது.
இன்றைய காலகட்டத்தில் அடுத்ததாக ஆட்கள் பற்றாக்குறை தான் விவசாயத்தின் மிகப்பெரிய சவால். உதாரணமாக எங்கள் பகுதியான திருப்பூர், கோவை பகுதியில் விவசாய வேலைகளுக்கு ஆட்கள் என்பது குதிரைகொம்பாக உள்ளது. விவசாய நிலங்களில் வேலை செய்வதை காட்டிலும் தொழிற்ச்சாலைகளில் வேலை செய்வதை சிறப்பாக எண்ணுகிறார்கள். அடுத்ததாக மத்திய அரசு செய்த அற்புத திட்டம் தேசிய ஊரக வேலை வாய்ப்பு திட்டம். ஒட்டு மொத்தமாக விவசாயதிற்கு ஆப்பு வைத்த திட்டம். இன்றைய ஆட்கள் தான் தொழிற்சாலைகள் செல்கின்றனர். பழைய ஆட்கள் மூலமாக நடந்து வந்த கொஞ்ச நஞ்ச விவசாயமும் அம்பேல்.
ஆட்கள் பற்றாக்குறையை சமாளிக்க இயந்திரங்கள் வந்தாலும் அவற்றிற்கு வாடகை கொடுத்து கட்டுபடியாகாத நிலை. பல ஏக்கர் நிலம் வைத்து இருப்பவர்க்கே இயந்திரங்கள் உதவும். ஒன்று இரண்டு ஏக்கர் வைத்துள்ளவர்களுக்கு ..???.
சீனா போன்ற ஒப்பிடுகையில் நமது நாட்டில் ஒரு ஏக்கருக்கான உற்பத்தி என்பது மிகவும் குறைவே. அதற்கு காரணம் பசுமைப்புரட்சி. நமது பசுமை புரட்சி திட்டங்கள் ரசாயனங்களை அறிமுகம் செய்து நிலத்தை கெடுத்து உற்பத்தியை குறைத்துவிட்டன. வெளிநாட்டு ரசாயன உர நிறுவனங்கள் மேல் தான் அரசுக்கு அக்கறையே தவிர. விவசாயத்தின் மேலோ, நாட்டு மக்கள் மேலோ அல்ல. ரசாயன மருந்துகளின் விளைவுகள் கண்கூடாக கண்ட பிறகும் அதை இன்னும் அரசு ஆதரிப்பது விளங்கவே இல்லை...
ஒரு விவசாயி இயந்திரங்கள் மூலம் உழவு செய்து, களைகொல்லி, பூச்சிக்கொல்லி மருந்துகள் அடித்து, உரம் இட்டு எல்லாம் செய்து விற்பனை செய்கையில். அவனுக்கு கிடைப்பது என்னமோ சொற்பம் தான். விவசாய பொருட்களுக்கு உரிய விலை என்பது எப்போதும் கிடைப்பதே இல்லை. அப்படி மக்களிடம் தான் குறைவாக சென்று சேர்கிறதா என்றால் அதுவும் இல்லை. இடையில் புகுந்து சில மணிகளில் பலமடங்கு லாபம் பார்க்கும் இடைத்தரகர்கள் தான் லாபமடைகின்றனர். விவசாயத்தில் சம்பந்தமே இல்லாதவர்கள் கூட விவசாய பொருட்களை வாங்கி இருப்பு வைத்து அதிக விலைக்கு விற்று லாபமடைகின்றனர். கார்பரேட் கம்பனிகள் கூட இதில் இறங்கி செயல்படுகின்றன. இருப்பு வைக்கவோ, விலை கிடைக்கவோ முடியாத விவசாயிகள் கொடுத்ததை வாங்கி கொள்ள கூடிய நிலைமை-.



------------ இன்னும் விளையும்

2 comments:

IMMORTALS - 3D

நம்ம தமிழ் படங்கள் சில சொதப்புவது போல் ஆங்கில படங்களும் சொதப்புவதுண்டு அந்த வரிசையில் நானும் தான் வருவேன்னு இந்த படமும் வந்துடுச்சு. இந்த படத்த நான் பாக்க காரணம் ரெண்டு. ஒன்னு 300 படத்த எடுத்தவங்க எடுத்து இருக்காங்கனு, ரெண்டாவது ஹாலிவுட் படங்கள் பார்த்து ரொம்ப நாள் ஆச்சு.இதுக்கு முன்னாடி டோனி ஜா வோட ONG BAK-3 பார்த்தேன்(இது ஹாலிவுட் இல்லை). நான் பார்த்து ரொம்பவும் நொந்து போன படு மொக்கை படம். அதுக்கு அப்பறம் இந்த படம். ஆனா ONG BAK-3 அளவுக்கு படு மொக்கையாக இல்லை.
படத்தோட கதை என்ன?


படத்தோட கதை படம் பார்த்து புரிஞ்சுக்க ரொம்ப கஷ்டமா இருக்கும். உங்களுக்காக கோர்வையா சொல்லி முடிச்சுடறேன்.
முன்னொரு காலத்துல கிரேக்க கடவுள்களுக்கும்(ஜீயஸ்) தீய சக்திகளுக்கும்(டைட்டன்ஸ்) சண்டை அதுல தோத்துபோன டைட்டன்ஸ்கள பாதாள சிறைல வச்சுடறாங்க. அவுங்கள விடுவிக்க ஒரு வில் ஒன்னு இருக்கு. அது இந்த உலகத்துல இருக்கற ஏதோ ஒரு தேவாலயத்துல இருக்கு. இது பிளாஷ்பேக்.
இப்ப அந்த வில்ல எடுத்து டைட்டன்ஸ் களை விடுவிக்க ஒரு குரூப் கெளம்புது. அதுக்கு ஒரு காரணம் ஒன்னு இருக்கனும்ல. அது இந்த உலகத்தயே ஆள்வதற்காம். சரி இந்த குரூப் ஒவ்வொரு தேவாலயமா போய் அங்கிருக்கற சந்நியாசிகள, மக்கள கொன்னுட்டு தேடிட்டு இருகாங்க.அந்த குரூப்புக்கு அரசர் பேரு ஹிபெரியன்.
அடுத்து கட் பண்ணா கிரேக்க நாட்ல ஒரு பகுதில ஒதுக்கப்பட்ட மக்கள் இருக்காங்க. அங்க தான் இருக்காரு நம்ம படத்தோட ஹீரோ தேசியஸ். அந்த இடத்துக்கும் வராங்க ஹிபெரியன் குரூப். ஹீரோவோட அம்மாவை கொன்னுடறாங்க. ஹீரோவையும் கைது பண்ணிடறாங்க. ஒரு பாலைவனத்தில் இருக்கற மடத்துல நாலு பொண்ணுங்க இருகாங்க அதுல ஒரு பொண்ணுக்கு அதிசய சக்தி இருக்கு. அந்த பொண்ணு தேசியஸ அடையாளம் கண்டு சொல்றாங்க இவனால தான் நம்ம மக்களை காப்பாற்ற முடியும்னு சாக போற நிலைமையில் இருக்கற அவன காப்பாத்தரா(ஹீரோயின்). அங்கிருந்து ஹீரோ, ஹீரோயின், துணைக்கு மூணு பேருன்னு தப்பிகறாங்க.


திரும்ப தன்னோட சொந்த ஊருக்கு வராரு ஹீரோ கூட தப்பிச்சவங்களோட. அவங்க அம்மாவ அடக்கம் பண்ணும்போது எதோச்சையா அந்த சக்தி வாய்ந்த வில்லை கண்டுபிடிக்கறார். இதுக்குள்ள வில்லன் ஹிபெரியன் ஹீரோ கிட்ட இருந்து வில்லை கைப்பற்றி டைட்டன்ஸ விடுவிக்க கிரேக்க நாட்டுல இருக்கற டர்டரோஸ் மலைக்கு போறாங்க.
அதுக்குள்ள கடவுள்கள் உதவியோட ஹீரோ கிரேக்கம் வரார். ஹீரோ அங்க படை திரட்டி படைக்கு தலைமை ஏற்று சண்டை போடறார். அதுக்குள்ள வில்லன் ஹிபெரியன் டைட்டன்ஸ விடுவிக்கறார், உடனே ஜீயஸ் கடவுள் தன்னோட ஆட்களோட வந்து டைட்டன்ஸ அழிக்கறார்.
அப்பறம் ஹீரோ வில்லன அழிக்கறார். அவரும் சாகறார். எதிரிகள் எல்லோரும் அழிகிறார்கள். அப்பறம் ஹீரோயின் தன்னோட மகனோட இருக்கிறார். எல்லாம் முடிகிறது.



படத்துல ஒரே ஒரு விஷயம் மட்டும் நல்லா இருக்கு அது ஹாலிவுட்டுகே உண்டான கிராபிக்ஸ். படத்தின் ஒவ்வொரு பிரேமிலும் உழைப்பு தெரிகிறது. மற்றவை எல்லாம் சொல்லிகொள்ளும் படியாக இல்லை. 3 டி எபக்ட்ஸ் ஒன்றும் சொல்லி பெரிதாக இல்லை.
இவர்களின் முந்தய படமான 300 படத்தின் விறுவிறுப்பு பத்து சதவிகிதம் கூட இல்லை.

0 comments:

நொய்யலின் தாண்டவம்

கடந்த சில நாட்களுக்கு முன்பு திருப்பூரில் நொய்யல் நதியில் ஏற்பட்ட வெள்ளம் காரணமாக பல உயிர்கள் பலியானதும், ஆயிரக்கணக்கான மக்கள் உடைமை இழந்து வாடுவதும் அனைவரும் அறிந்து இருப்பீர்கள்.
மக்களுக்கு உதவிகள் வந்தாலும் என்னை கோபப்பட வைத்த செய்தி. திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்கம் சார்பில் தந்த நிதிதான். கிட்டத்தட்ட மூன்றாயிரம் உறுப்பினர்களை கொண்ட சங்கம். ஏறத்தாழ அனைவரும் கோடிகளில் வாழ்பவர்கள். அவர்கள் அனைவரும் சேர்ந்து அளித்த உதவித்தொகை வெறும் ஒரு லட்சம்.
நடுத்தர, ஏழை மக்கள் கூட தங்களால் முடிந்த உதவிகளை தங்கள் உற்றார் உறவினருக்கு செய்து வருகின்றனர். இந்த நிலைமையில் இப்படி ஒரு பேருதவி செய்து இழிவை தேடிக்கொண்டனர் ஏற்றுமதியாளர்கள்.

உதவ விருப்பம் உள்ளவர்கள் தங்களால் முடிந்த உதவிகளை வழங்குமாறு இந்த பதிவின் மூலம் கேட்டு கொள்கிறேன்.

0 comments:

மீண்டும் கிறுக்கல்கள்

ஒரு மாசமா நேரம் கிடைக்காத காரணத்தால் ப்ளாக் பக்கம் உலாவ முடியல. நேரம் கெடைக்கலனு சொல்றத விட நேரம் ஒதுக்க முடியல. அப்பறம் அனேகமா எல்லாரும் தீபாவளிய சிறப்பா கொண்டாடி இருப்பிங்க. படங்களும் பார்த்து இருப்பீங்க. நானும் மூணு படமும் பார்த்தேன். ஆனா என்னால பகிர்வதற்கு வாய்ப்பு கிடைக்கல.

தீபாவளி அப்ப 7 ஆம் அறிவு பாக்கலாம்னு ஒரு பிளான் பண்ணி ஆன்லைனில் டிக்கெட் புக் பண்ணுவமேனு பாத்தேன் டிக்கெட் விலையெல்லாம் 120, 150 னு போட்டு இருக்கு. அப்படி போய் பக்கனுமானு அந்தன்னைக்கு பாக்கல. வேலாயுதம் பாக்கலாம் இதுக்கு முன்னாடி விஜய் படம் பார்த்து நொந்து இருந்ததால பாக்க தைரியம் வரல. ஸோ வீட்லயே பலகாரம் சாப்பிட்டு, நன்னா தூங்குனேன். மறுநாள் நண்பர்களோட ப்ரோக்ராம் போட்டு கொடுவேரி போலாமுனு போனோம். ஒரே மழை. அதனால போற வழியில் கோபிசெட்டிபாளையத்தில்
7 ஆம் அறிவு பாத்தோம். படம் ஒன்னும் பெருசா இம்ப்ரெஸ் பண்ணல, இருந்தாலும் பாக்கலாம். ஆனா டிக்கெட் ஐம்பது ரூபாய். அதுக்கான ஒரு வசதி கூட இல்ல தியேட்டரில்.

ரெண்டு நாளைக்கு அப்பறம் அதாவது சனிக்கிழமையன்று வேலாயுதம் பாப்போம்னு நண்பர்களுடன் திருப்பூரில் உள்ள உஷா சினி காம்ப்ளெக்ஸ் போனேன். அது வெகு காலமா ஓடம இருந்து புதுசா கட்டி முதல் முறையா வேலாயுதம் போடறாங்க. ஏற்கனவே படம் நல்லா இருக்கு அப்படிங்கற பேச்சால ஹவுஸ் புல். எல்லா தியேட்டகளிலும் இதே நிலைமை.சரி என்ன பண்ணலாம்னு இன்னொரு ஸ்க்ரீன்ல ரா ஒன் பாக்க போனோம்.
திருப்பூரில் வடநாட்டினர் அதிகம் இருப்பதால் அவர்கள் கூட்டம் அதிகம் இருந்தது. இந்த படமும் சுமார்தான் ஷாருக்கானுக்காக படம் பாக்கலாம்.

கடைசியா மறுபடி ரெண்டு நாள் கழிச்சு வேலாயுதம் பாக்க போனோம். அப்பவும் ஒரே கூட்டம். இந்த தடவ படம் பாக்காம வரக்கூடாது. அப்படி என்னத்த பண்ணி இருக்காங்கனு அடிச்சுபிடிச்சு டிக்கெட் வாங்கி படம் பாத்தேன் அதே உஷாவில். இடைவேளை வரை நல்லாவே சென்றது. விஜய் கஷ்டப்பட்டு டிரெய்ன நிருத்துனதோட படம் முடிஞ்சுதுன்னு நெனைச்சேன். அப்பறம் தான் சொதப்பி இருக்காங்க. இருந்தாலும் படம் நல்லாவே இருந்தது. பாடல்களும் கேட்கும்படி இருந்தது. விஜய்க்கு இது ஒரு ஹிட் படம்.

இதெல்லாம் பார்த்த நான். ப்ளாக் எழுத முடியாத காரணம். (எனது இன்டர்நெட் டேட்டா கார்டு பழுதடைந்துவிட்டது. வேறு ஒன்று வாங்கலாம்னா நிதி பற்றாக்குறை. ஒரு வழிய ரெண்டு நாளைக்கு முன்னாடி வாங்கிட்டேன். நான் இருப்பது திருப்பூரில் இருந்து 20 கிலோமீட்டர் தொலைவில் உள்ள ஊத்துக்குளியில் இருந்து 5 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள கிராமம்.எங்க ஏரியாவில் தொலைபேசி வழி இணையம் கிடைக்க வாய்ப்பில்லை. ஏனென்றால் இங்கு 3g வசதி இல்லை .அதனால் டேட்டா கார்டு மூலமும் போதுமான வேகம் இல்லை. இருந்தாலும் இணையம் இயக்கிவருகிறேன்.)

என்ன செய்ய கிராமங்களை தான் எந்த ஒரு அரசும் கண்டுகொள்வதில்லையே.

0 comments: