பில்லா 2 - An REBOOT Of Don



மங்காத்தா படத்தோட வெற்றிக்கு பின் எல்லோராலும் எதிர்பார்க்கப்பட்ட, குறிப்பாக அஜித் ரசிகர்களால் மிக மிக எதிர்பார்க்கப்பட்ட படம் பில்லா 2. ஓபனிங் கிங் என்று சொல்லியதாலோ என்னமோ பில்லா படத்துக்கு டிக்கெட் விலை அட்டகாசமாய் ஏற்றி வைத்து இருந்தார்கள். ஆன்லைனில் கூட டிக்கெட் நூறு ரூபாய்க்கு குறைவாக இல்லை.தேவை இல்லாமல் தியேட்டர்காரன் கொள்ளைஅடிக்க விரும்பாததால் ரெண்டு மூணு நாள் கழித்து பார்த்துக்கொள்ளலாம் என்று நான் இருந்தேன். ஆனால் முதல் நாளே பார்க்கவேண்டிய நிலைமையும் வந்து பார்த்தும் விட்டேன். பில்லா படத்த எல்லோரும் எழுதி தள்ளி இருந்தாலும் நானும் எழுதறேன். ஆனாலும் அப்போது படத்த பத்தி எழுத நேரம் இல்லாமையால் இப்போது பதிவிடுகிறேன்.
ஹாலிவுட் இயக்குனர்கள் எல்லாம் சூப்பர் ஹிட் படங்கள ரீபூட் பண்ணிட்டு இருக்கும் போது நாமும் பண்ணுவோம்னு ஆரம்பிச்சாங்க பில்லாவை பில்லா II என்று.இந்த ரீபூட் இத்யாதிகள் எல்லாம் நம்ம தமிழ்நாட்டு ரசிகர்களுக்கு ஒத்துவருமா,? என்ற கேள்வி தொக்கி எழுந்து அதே எண்ணத்துடனே உள்ளே சென்று அமர்ந்தேன்.அஜித் ஸ்க்ரீனில் ட்ரெய்லரில் பேசிய அந்த வசனத்துடன் தோன்ற ஆரம்பித்ததுமே அஜித் ரசிகர்களுடன் சேர்ந்து நமக்கும் உற்சாகம் தொற்றிக் கொள்கிறது. அங்கிருந்து பிளாஷ்பாக் ஆரம்பிக்கிறது. எந்தவித இலக்கும் இல்லாமல் இலங்கை அகதியாக இந்தியா வந்து இறங்குகிறார் அஜித். அங்கிருந்து கடத்தல் தொழில் இறங்கி கொஞ்சம் கொஞ்சமாய் வளர்ந்து சென்னை, கோவா, ரஷ்யா என படிப்படியாக எப்படி பில்லா மிகப்பெரிய டானாக மாறுகிறார் என்ற கதைதான் பில்லா.
படத்தில் உயிர் நாடியே அஜித் மட்டுமே, அவர் மட்டுமே படம் முழுவதும் முழுக்க வியாபித்து இருந்தார். மற்ற அனைவரும் எதாவது ஒரு காட்சியில் வருகிறார்கள் பின் இன்னொரு காட்சியில் ஏனோ காரணத்துக்காக கொல்லபடுகிறார்கள்.ஒளிப்பதிவு, எடிட்டிங் என எல்லாவிதத்திலும் ஸ்டைலிஷான ஹாலிவுட் தரத்திற்கு படத்தை உருவாக்கி இருக்கிறார்கள். படத்தில் வசனங்கள் எல்லாம் ஷார்ப். அஜித் டயலாக் பேசும்போது எல்லாம் தியேட்டரில் ஒரே ஆரவாரம், "என் பேரு கேட்டல ? பில்லா டேவிட் பில்லா.." என்று சொல்லிக்கொண்டே சுடும் போது விசில் காதை பிளந்தது. ஆர்.டி ராஜாசேகரின் ஒளிப்பதிவும், சுரேஷ் அர்ஸின் எடிட்டிங்கும், வசனகர்த்தா முருகனும், அஜித்தும் மட்டுமே படத்தை காப்பாற்றுகிறார்கள். யுவனின் பின்னணி இசை ஓகே.
மதுரை பொண்ணு பாடலுக்கு தேடி தேடி ஹீரோயின்களை ஆட வைத்தவர்கள், புதிது புதிதாக லொகேசன்களுக்கு மெனக்கெட்டவர்கள், படு ஸ்டைலிஷாக எடுக்க முனைந்தவர்கள் திரைக்கதைக்கும் கொஞ்சம் கவனம் எடுத்து இருந்து இருந்தால்.யுவனின் இசையில் ஒரு பாடல் கூட மனதில் நிற்கவில்லைஒரே இரைச்சல் பாடல்களில். பின்னணி இசையில் சில இடங்களில் மட்டும் ஓகே. ஒவ்வொரு கேரக்டரும் திடீர் என்று வருகிறார்கள் அப்படி வருகிற ஒரு கேரக்டர் கூட மனதில் நிற்கவில்லை. ஏன் அஜித் அகதியாக வருகிறார், எதற்காக கடத்துகிறார், ஏன் அவர் இத்தனை கொலைகள் செய்கிறார், ஏன் அவர் காதலிப்பதில்லை இப்படி பல ஏன் -கள் படம் முழுக்க வந்து கொண்டே இருக்கிறது.
பார்வதி ஓமனகுட்டன் அஜித்தின் அக்கா மகளாக வருகிறார். அவர் ஒருதலையாக அஜித் மேல் காதல் கொண்டு மாமா மாமா என்று ரெண்டு மூணு காட்சிகளில் வருகிறார் .அப்புறம் சாகடிக்கப்படுகிறார், அவர் சாகும் போது ரசிகர்களுக்கு எந்தவித ரியாக்சனும் இல்லை. படத்தில் இவரை கூட பார்க்க முடிகிறது, ஆனால் இன்னொரு ஹீரோயின் என்று சொல்லப்பட்ட புருனோ அப்துல்லா கோவா தாதா சுதன்சு பாண்டே வின் காதலியாய் வந்து பின் அஜித்தின் காதலியாய் மாறும் இவரை எங்கிருந்து தான் பிடித்தார்களோ பார்க்கவே சகிக்க வில்லை. பேசாமல் நமீதாவையே நடிக்க வைத்து இருக்கலாம். அஜித்தையும் அஜித் ரசிகர்களையும் மட்டுமே நம்பி படத்தை எடுத்து சொதப்பி விட்டார்கள் என்றே சொல்லவேண்டும். படத்தின் இறுதியில் எல்லோரும் கொல்லப்பட்டு அஜித்தும், அவரது கூட்டாளியும் மட்டுமே மிஞ்சுகிறார்கள். படத்திற்கு இவ்வளவு செலவு செய்து , சிறந்த ஒளிப்பதிவு, எடிட்டிங் எல்லாம் இருந்தும் படம் பார்த்த ஒரு தாக்கம் ஒரு சதவீதம் கூட இல்லை.
இனி டான்..... அடுத்த பாகத்தில் வெளிவருவார் என எதிர்பார்க்கலாம்.

ஆர்ப்பட்டமில்லாத அந்த அமைதியான ஸ்டைலிஷான அஜீத்துக்காக மட்டும் படம் பார்க்கலாம்.

0 comments: