THE DARK KNIGHT RISES


இந்த வருடத்தில் உலக பேட்மேன் மற்றும் கிறிஸ்டோபர் நோலன் ரசிகர்களால் மிகவும் எதிர் பார்க்கப்பட்ட படம்.அந்த எதிர்பார்ப்புக்கு முக்கிய காரணங்கள் நோலன், மற்றும் அவர் இதற்கு முன் இயக்கிய BATMAN BEGINS மற்றும் THE DARK KNIGHT படங்களின் வெற்றியும் தான்.
சூப்பர் ஹீரோ வரிசையில் பேட்மேன் பற்றி தெரியும் என்றாலும் பேட்மேன் சீரீஸ் படங்களை நான் பார்த்ததில்லை.நான் அதிகம் ரசித்த சூப்பர் ஹீரோ SPIDERMAN மட்டுமே, மற்றபடி சூப்பர்மேன் ரிட்டர்ன் மட்டும் பார்த்து இருக்கிறேன். ஆரம்பத்தில் பேட்மேன் படங்கள் பார்க்க வாய்ப்பு இருந்தும் அப்படங்களை பார்க்க இயலவில்லை. ஆக எனக்கு பேட்மேன் பேர தவிர ஒன்னும் தெரியாது. அப்பறம் கொஞ்ச நளைக்கு முன்னாடி நோலன், பேட்மேன் பத்தி எல்லாரும் ஆளாளுக்கு பேச ஆரம்பிக்க நானும் கருந்தேள் கண்ணாயிரம் மற்றும் லக்கி லிமட் ப்ளாக்ல அத பத்தி படிக்க போக, ஆர்வம் மிகுதில பழைய ரெண்டு படங்களையும் பார்த்துட்டு முதல் நாள் செகண்ட் ஷோவுக்கு போனேன்.

THE DARK KNIGHT RISES

ஆரம்ப காட்சியில் இந்த கதையின் வில்லன் BANE விமானத்தில் ரஷ்ய நியுக்ளியர் விஞ்ஞானி ஒருவரை கடத்துகிறான். பின் அந்த விமானத்தை விபத்துக்குள்ளாகி தப்புகிறான். இங்கே கோதம் சிட்டியில் ஹார்வி டென்டின் எட்டாவது நினைவு நாளில் உண்மையை சொல்லவரும் கமிஷ்னர் கோர்டன் அதை சொல்லாமலே பின் ஒரு நாளில் சொல்வதாக சொல்லி அந்த உரையை தன்னுடனே வைத்துகொள்கிறார். தனது காலில் அடிபட்ட காரணத்தால் மாளிகையை விட்டு எங்கும் செல்லாமல் இருக்கிறார் புரூஸ் வெயின். அவரது மாளிகைக்கு திருட வரும் கேட் வுமன் அங்கிருந்து நெக்லஸ் ஒன்றை திருடி செல்கிறாள் அத்துடன் புரூஸ் வெயின் கைரேகையும் திருடப்படுகிறது. அந்த கைரேகையை மாபியா கும்பலுக்கு விற்கும் போது. அந்த இடம் கமிஷ்னர் கோர்டன் அவர்களால் சுற்றிவளைக்கப்படுகிறது. அவர்களை தொடர்ந்து செல்லும் கோர்டன் பேன் இருப்பிடத்தை அறிகிறார். பேன் அவரை தாக்கி தூக்கி விசுகிறான். அவர் கீழ் நிலை போலீசான ஜான் பிளேக மூலம் காப்பாற்றபடுகிறார். கோர்டன் மருத்துவமனையில் அனுமதிக்க பட்டு இருக்கும் இடத்துக்கு ப்ரூஸ் தன் முகத்தை மறைத்துக்கொண்டு சென்று பார்க்கிறார். அவரிடம் பேட்மேன் இனி வரமாட்டன் என்று சொல்கிறார். கோதம் சிட்டி மிக ஆபத்தில் இருப்பதாகவும் BANEஐ சமாளிக்க பேட்மேன் வரவேண்டும் என்றும் கோர்டன் சொல்கிறார்.


இந்த நிலையில் பேன் கோதம் நகரத்தில் படிப்படியாக தன்னுடய வில்லத்தன செயல்களில் ஈடுபட துவங்குகிறான். புரூஸ் வேய்ன் நிறுவனம் நட்டத்தில் இயக்குவதாக கூறி புதிய இயக்குனராக மிராண்டா டேட் என்ற பெண் நியமிக்க படுகிறாள். அவளிடம் தன்னுடைய நியுக்ளியர் எனர்ஜி ப்ராஜெக்ட் திட்டம் பற்றியும் கூறி அதனை புரூஸ் வேய்ன் அவளிடம் ஒப்படைக்கிறார். பின் புரூஸ் பேட்மேனாக மாறி கேட் வுமனிடம் பேன் இருப்பிடத்தை கட்டுமாறு கேட்க அவள் பேன் இடத்தை காட்டுகிறாள். அங்கு பேனால் புரூஸ் வேய்ன் முதுகு உடைக்கபட்டு பேட்மேன் பாதாள சிறையில் வைக்கபடுகிறார். இங்கு நகரில் பல இடங்களில் அழிவை ஏற்படுத்தி கொண்டு இருக்கும் பேன் வேய்னின் நியுக்ளியர் எனர்ஜியை ரஷ்ய விஞ்ஞானி உதவியுடன் அணுகுண்டாக மாற்றி, பின் அவரையும் கொன்றுவிட்டு கொஞ்ச நாளில் நகரம் அழியபோகிறது என்று சொல்லிவிடுகிறான்.
இதன் பின் புரூஸ் வேய்ன் பாதாள சிறையில் இருந்து தப்புகிறரா? பேனை சமாளித்தாரா ? கோதம் சிட்டியை காப்பாற்றினாரா? என்பதை ரொம்ப நீளமாக சொல்லி இருக்கிறார்கள்.

படத்தில் பேட்மேன் வரும் காட்சிகள் குறைவே, பேட்மேனும் சாதாரண மனிதனே அவனுக்குள்ளும் பல போராட்டங்கள் இருக்கிறது, எனவே மக்கள் எல்லா சூழ்நிலைகளிலும் யாராவது ஒருவர் தங்களை காப்பாற்ற வருவார் என்ற எண்ணத்தை கொள்ளாமல் மக்கள் தங்களுக்கான அளவில் மற்றவர்களுக்கு உதவ வேண்டும் என்பதை சொல்லி இருக்கிறார்கள். இந்த படத்தை ஆளாளுக்கு எழுதி தள்ளி விட்டார்கள், சிலர் படம் அருமை என்றும், சிலர் எதிர்பார்த்த அளவு இல்லை என்றும், சிலர் மொக்கை என்றும் சொல்கிறார்கள், ஆனால் பேட்மேன் பேரை மட்டும் கேள்விப்பட்டு, சில பல பதிவுகளின் பேட்மேன் பற்றி தெரிந்து கொண்டு சென்றதாலும், மற்றும் இதற்கு முந்தைய பாகங்களை தற்சமயம் பார்த்து விட்டு சென்றதால் என்னவோ படம் எனக்கு நன்றாகவே இருந்தது போல் இருந்தது.
மற்றபடி ரசிகர்களை மோசம் செய்யவில்லை என்றே சொல்லுவேன்.
நோலன் பற்றிய சில ஆச்சர்ய தகவல்கள் மற்றும் அவரின் படங்களை பற்றி அறிந்துகொள்ளவும் THE DARK KNIGHT RISES உதவியது.

இந்த படத்தை பற்றி மேலும் தெரிந்து கொள்ள சில பதிவுகள் இங்கே
கருந்தேள்
பாதசாரி
லக்கி லிமட்
ஹாலிவுட்ராஜ்
யுவகிருஷ்ணா

0 comments:

பில்லா 2 - An REBOOT Of Don



மங்காத்தா படத்தோட வெற்றிக்கு பின் எல்லோராலும் எதிர்பார்க்கப்பட்ட, குறிப்பாக அஜித் ரசிகர்களால் மிக மிக எதிர்பார்க்கப்பட்ட படம் பில்லா 2. ஓபனிங் கிங் என்று சொல்லியதாலோ என்னமோ பில்லா படத்துக்கு டிக்கெட் விலை அட்டகாசமாய் ஏற்றி வைத்து இருந்தார்கள். ஆன்லைனில் கூட டிக்கெட் நூறு ரூபாய்க்கு குறைவாக இல்லை.தேவை இல்லாமல் தியேட்டர்காரன் கொள்ளைஅடிக்க விரும்பாததால் ரெண்டு மூணு நாள் கழித்து பார்த்துக்கொள்ளலாம் என்று நான் இருந்தேன். ஆனால் முதல் நாளே பார்க்கவேண்டிய நிலைமையும் வந்து பார்த்தும் விட்டேன். பில்லா படத்த எல்லோரும் எழுதி தள்ளி இருந்தாலும் நானும் எழுதறேன். ஆனாலும் அப்போது படத்த பத்தி எழுத நேரம் இல்லாமையால் இப்போது பதிவிடுகிறேன்.
ஹாலிவுட் இயக்குனர்கள் எல்லாம் சூப்பர் ஹிட் படங்கள ரீபூட் பண்ணிட்டு இருக்கும் போது நாமும் பண்ணுவோம்னு ஆரம்பிச்சாங்க பில்லாவை பில்லா II என்று.இந்த ரீபூட் இத்யாதிகள் எல்லாம் நம்ம தமிழ்நாட்டு ரசிகர்களுக்கு ஒத்துவருமா,? என்ற கேள்வி தொக்கி எழுந்து அதே எண்ணத்துடனே உள்ளே சென்று அமர்ந்தேன்.அஜித் ஸ்க்ரீனில் ட்ரெய்லரில் பேசிய அந்த வசனத்துடன் தோன்ற ஆரம்பித்ததுமே அஜித் ரசிகர்களுடன் சேர்ந்து நமக்கும் உற்சாகம் தொற்றிக் கொள்கிறது. அங்கிருந்து பிளாஷ்பாக் ஆரம்பிக்கிறது. எந்தவித இலக்கும் இல்லாமல் இலங்கை அகதியாக இந்தியா வந்து இறங்குகிறார் அஜித். அங்கிருந்து கடத்தல் தொழில் இறங்கி கொஞ்சம் கொஞ்சமாய் வளர்ந்து சென்னை, கோவா, ரஷ்யா என படிப்படியாக எப்படி பில்லா மிகப்பெரிய டானாக மாறுகிறார் என்ற கதைதான் பில்லா.
படத்தில் உயிர் நாடியே அஜித் மட்டுமே, அவர் மட்டுமே படம் முழுவதும் முழுக்க வியாபித்து இருந்தார். மற்ற அனைவரும் எதாவது ஒரு காட்சியில் வருகிறார்கள் பின் இன்னொரு காட்சியில் ஏனோ காரணத்துக்காக கொல்லபடுகிறார்கள்.ஒளிப்பதிவு, எடிட்டிங் என எல்லாவிதத்திலும் ஸ்டைலிஷான ஹாலிவுட் தரத்திற்கு படத்தை உருவாக்கி இருக்கிறார்கள். படத்தில் வசனங்கள் எல்லாம் ஷார்ப். அஜித் டயலாக் பேசும்போது எல்லாம் தியேட்டரில் ஒரே ஆரவாரம், "என் பேரு கேட்டல ? பில்லா டேவிட் பில்லா.." என்று சொல்லிக்கொண்டே சுடும் போது விசில் காதை பிளந்தது. ஆர்.டி ராஜாசேகரின் ஒளிப்பதிவும், சுரேஷ் அர்ஸின் எடிட்டிங்கும், வசனகர்த்தா முருகனும், அஜித்தும் மட்டுமே படத்தை காப்பாற்றுகிறார்கள். யுவனின் பின்னணி இசை ஓகே.
மதுரை பொண்ணு பாடலுக்கு தேடி தேடி ஹீரோயின்களை ஆட வைத்தவர்கள், புதிது புதிதாக லொகேசன்களுக்கு மெனக்கெட்டவர்கள், படு ஸ்டைலிஷாக எடுக்க முனைந்தவர்கள் திரைக்கதைக்கும் கொஞ்சம் கவனம் எடுத்து இருந்து இருந்தால்.யுவனின் இசையில் ஒரு பாடல் கூட மனதில் நிற்கவில்லைஒரே இரைச்சல் பாடல்களில். பின்னணி இசையில் சில இடங்களில் மட்டும் ஓகே. ஒவ்வொரு கேரக்டரும் திடீர் என்று வருகிறார்கள் அப்படி வருகிற ஒரு கேரக்டர் கூட மனதில் நிற்கவில்லை. ஏன் அஜித் அகதியாக வருகிறார், எதற்காக கடத்துகிறார், ஏன் அவர் இத்தனை கொலைகள் செய்கிறார், ஏன் அவர் காதலிப்பதில்லை இப்படி பல ஏன் -கள் படம் முழுக்க வந்து கொண்டே இருக்கிறது.
பார்வதி ஓமனகுட்டன் அஜித்தின் அக்கா மகளாக வருகிறார். அவர் ஒருதலையாக அஜித் மேல் காதல் கொண்டு மாமா மாமா என்று ரெண்டு மூணு காட்சிகளில் வருகிறார் .அப்புறம் சாகடிக்கப்படுகிறார், அவர் சாகும் போது ரசிகர்களுக்கு எந்தவித ரியாக்சனும் இல்லை. படத்தில் இவரை கூட பார்க்க முடிகிறது, ஆனால் இன்னொரு ஹீரோயின் என்று சொல்லப்பட்ட புருனோ அப்துல்லா கோவா தாதா சுதன்சு பாண்டே வின் காதலியாய் வந்து பின் அஜித்தின் காதலியாய் மாறும் இவரை எங்கிருந்து தான் பிடித்தார்களோ பார்க்கவே சகிக்க வில்லை. பேசாமல் நமீதாவையே நடிக்க வைத்து இருக்கலாம். அஜித்தையும் அஜித் ரசிகர்களையும் மட்டுமே நம்பி படத்தை எடுத்து சொதப்பி விட்டார்கள் என்றே சொல்லவேண்டும். படத்தின் இறுதியில் எல்லோரும் கொல்லப்பட்டு அஜித்தும், அவரது கூட்டாளியும் மட்டுமே மிஞ்சுகிறார்கள். படத்திற்கு இவ்வளவு செலவு செய்து , சிறந்த ஒளிப்பதிவு, எடிட்டிங் எல்லாம் இருந்தும் படம் பார்த்த ஒரு தாக்கம் ஒரு சதவீதம் கூட இல்லை.
இனி டான்..... அடுத்த பாகத்தில் வெளிவருவார் என எதிர்பார்க்கலாம்.

ஆர்ப்பட்டமில்லாத அந்த அமைதியான ஸ்டைலிஷான அஜீத்துக்காக மட்டும் படம் பார்க்கலாம்.

0 comments:

பைரேட்ஸ் ஆஃப் கரீபியன்


வெகு நாட்களாகவே நான் இந்த பைரேட்ஸ் ஆஃப் கரிபியன் சீரீஸ் படங்களை பற்றி எழுத வேண்டும் என நினைத்து இருந்தேன்.ஏனோ எழுத முடியாமல் தள்ளிப் போய்க்கொண்டே இருந்தது. அதற்கான, நேரம் என்பது இப்போதுதான் கிடைத்துள்ளது என்று நினக்கிறேன். இதையும் ஒரே பதிவில் முடித்து விடலாமா அல்லது ஒவ்வொரு பார்ட்டையும் தனித்தனி பதிவாக போடலாமா என்றும் பல யோசனைகளும் தோன்றுகிறது.ஆனாலும் பைரேட்ஸ் ஆஃப் கரிபியன் பற்றி நிறைய பகிர்ந்து கொள்ளலாம் என்று எண்ணுகிறேன்.இதை எழுத, இந்த படத்தின் வரலாறு பற்றியோ , பெரிதாக விமர்சனமோ செய்யவோ எனக்கு தெரியாது. எனக்கு தெரிந்ததை, அறிந்து கொண்டதை இங்கு எழுதுகிறேன் இதை படித்துவிட்டு கடுப்பனால் நான் பொறுப்பல்ல.

பேண்டசி கதைகள், சயின்ஸ் பிக்சன், சூப்பர் ஹீரோ கதைகள் என்றால் ஹாலிவுட்காரர்களை அடித்துக்கொள்ள முடியாது. அவர்கள் ஒவ்வொரு இயக்குனர்கள் வித்தியாசமான கதைகலன்களில் அசத்துவார்கள். அதற்கான இன்ஸ்பிரேசன் காமிக்ஸ் ஹீரோகளாகவோ, பேண்டசி நாவலாகவோ, வரலாற்று நிகழ்வாகவோ இருக்கும். ஒரு பார்ட் ஹிட் அடித்து விட்டால் உடனே அடுத்த பார்ட் ஆரம்பித்து விடுவார்கள், அதற்க்கு ஹாரிபாட்டர், லார்ட் ஆப் த ரிங்க்ஸ், ஸ்பைடர்மேன், சூப்பர் மேன், போன்ற படங்களே உதாரணம். அப்படி பல பாகங்கள் வந்து வெற்றி அடைந்த படங்களும் உண்டு, இரண்டாவது பாகத்திலேயே மண்ணை கவ்விய படங்களும் உண்டு.
ஹாலிவுட் படங்கள் பலருக்கு பிடிக்கும், அதில் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு கதை மிகவும் பிடித்துவிடும். அந்த வகையில் எனக்கு மிகவும் பிடித்த படவரிசைகளில் ஒன்றுதான் பைரேட்ஸ் ஆஃப் கரிபியன். பைரேட்ஸ் ஆஃப் கரிபியன் தனி ஒரு கதைக்களனுடன் ஆரம்பம் முதல் இறுதி வரை விறுவிறுப்பாக திரைக்கதை செல்வதாலும், ஜானி டெப்பின் சேட்டைகளாலும் , பிரமாண்ட கப்பல்கள் மற்றும் கடல் காட்சிகள், அருமையான கிராபிக்ஸ் , கதையின் போக்கிற்கு வலு சேர்க்கும் பின்னணி இசை இப்படி பல காரணங்களால் இந்த சீரீஸ் என்னை மிகவும் கவர்ந்துவிட்து.
இனி இந்த படங்கள் பத்தி அடுத்த பதிவில்...............

1 comments: