Life Of Pi - 3D


லைப் ஆப் பை படத்தோட ட்ரைலர் முதல் தடவையா அரைகுறையா பார்த்தேன். என்னமோ பாலிவுட் படம் போல இருக்குது. கப்பல், புலின்னு எல்லாம் காட்றானுங்களே , ஏற்கனவே கடந்த ரெண்டு,மூணு மாசமா வந்த படங்கள பாத்து நொந்து போய், பீட்சா, துப்பாக்கி-னு பாத்து கொஞ்சம் டீ குடிச்ச மாதிரி தெம்பா இருக்கேன் . இனி இந்த படமும் நம்ம லைப் ல முகமூடி , போட்டுக்கிட்டு தாண்டவம் ஆடிடுச்சுனா நம்மளும் skyfall ஆக வேண்டியது தான்னு நெனச்சுட்டு இருந்தேன். அப்பறம் படமும் ரிலீஸ் ஆச்சு, நம்ம பயலுகளும் இந்த படம் பார்க்கலையா,ஒரு தகவலும் காணோம்னு,யோசிச்சுகிட்டே இருந்தப்ப நம்ம மின்சாரவாரியம் மூலமா அதிசயமா கரண்ட் வந்துச்சு. நம்மளும் வந்த கரண்டுக்கு எப்படி நம்ம பங்க குடுக்கறதுன்னு யோசிச்சேன். ரொம்ப நாளா மின்சாரத்த பாக்காம இருக்கற டிவி கண்ணுல பட்டுச்சு அப்பறோம் அடுத்த ஐந்தாவது செகண்ட் ஒளியோடு, ஒலியையும் பரப்பியது. அந்தநேரம் எதேச்சையா மறுபடி ட்ரைலர் பார்த்தேன், அட நல்லா இருக்குதேனு.
அப்பறமா தான் தெரிஞ்சுது படத்த நம்ம நாட்டுல எடுத்துருக்காங்கனு.அப்பறம் கூகுள் சர்ச் பண்ணி மறுபடி ட்ரைலர் பார்த்ததுல நம்ம டைரக்டர் ஆங்-லீனு தெரிஞ்சுது. ஆனா இந்த பேர எங்கயோ கேள்விப்பட்டு இருக்கோமேனு நெனச்சுட்டு இருந்தேன். ஆனா புருஸ் லீ, ப்ரெட் லீ, சாம் லீ இப்படி லீயாவே நமக்கு நெறைய பேரு தெரியறதால இந்த லீ கேள்விப்பட்ட மாதிரி இருக்குதோனு விக்கிபீடியா தட்டுனதுல தெரிஞ்சுது croching tiger hidden dragon, hulk பட டைரக்டர்னு. இவர போய் மறந்துட்டோமே இந்த சினிமா உலகம் நம்மை மன்னிக்குமா?, அதனால இந்த படாத பாத்து அதுக்கு பரிகாரம் பண்ணிடலாம்னு இந்த படம் பாத்துட்டேன்,. லேட்டா பார்த்தாலும் பாருங்க இந்த படத்துக்கு ஒரு பதிவு போடற அளவுக்கு ஆகிடுச்சு. ஏன்னா இதுக்கு முன்னாடி துப்பாக்கி, skyfall , pizza ,சுந்தரபாண்டியன் , தாண்டவம், பார்த்துட்டு எழுதாதவன் இதுக்கு எழுதறேன். அப்படினா இந்த படத்துல ஒன்னும் இல்லையோனு நீங்க நெனச்சுட வேண்டாம். ஆனாலும் விஷயம் இருக்கு. அது என்னனு பாக்கலாம்.
இர்பான் கான் அவர்தான் pi. கனடாவில் வசித்து வரும் அவரை எழுத்தாளர் ஒருவர் சந்திக்கிறார். அவரின் வாழ்க்கையில் நடந்த சம்பவங்கள் பற்றி தெரிந்து கொண்டு கதை எழுத வருகிறார். இர்பான் கான் தனது சிறு வயதில் இருந்து வாழ்கை நிகழ்வுகளை ஆரம்பிக்கிறார். அவரது குடும்பம் பாண்டிச்சேரியில் வசித்து வருகிறது, அவரது தந்தை அதுல் ஹசன், அம்மா தபு, அண்ணன் என குடும்பம், அவர்கள் ஒரு மிருககாட்சி சாலையை நடத்தி வருகிறார்கள், ஒரு கட்டத்தில் மிருககாட்சி சாலை மூலம் பணம் சம்பாதிக்க இந்தியாவில் முடியாது. ஆக மிருகங்கள் அனைத்தையும் கனடாவில் விற்று அதன் மூலம் வேறு தொழில் செய்ய கப்பலில், தனது குடும்பம், மற்றும் மிருகங்களுடன் பயணம் செய்கிறார்கள், வழியில் புயல் தாக்குதலில் கப்பலில் உள்ள அனைவரும் இறந்துவிட ஒரு சிறு படகில் சிறுவன் பை- உடன் ஒரு வரிக்குதிரை, ஒரு கழுதைப்புலி , ஒரு உராங்குட்டான், ஒரு பெங்கால் புலியும் தப்புகின்றன. ஒரு கட்டத்தில் கழுதைப்புலி வரிக்குதிரையும் , குரங்கையும் கொன்றுவிட, கழுதைப்புலி புலி கொன்றுவிடுகிறது. இப்போது படகில் பை மற்றும் புலி மட்டுமே பயணம் செய்கிறார்கள். யாரும் துணைக்கு இல்லாத படகில் பை. புலிக்கு இரை யாகிவிடுவோம் என்ற பயத்துடனே பயணிக்கிறான். சில நிகழ்வுகளுக்குப் பின். பையும் புலியும் நண்பர்கள் ஆகி விடுகிறார்கள். இறுதியில் புலியும் சிறுவனும் எப்படி தப்பிக்கின்றனர் என்பதே கதை.
கிராபிக்ஸ், 3d எபக்ட்ஸ் ,சவுண்ட் எபக்ட்ஸ்,இசை என எல்லா துறைகளிலும் பட்டையை கிளப்பியுள்ளனர் இந்த படக்குழுவினர். இந்த படத்தில் வரும் புலி உண்மையான ஒன்றா, க்ராபிஸ்சா என்று கண்டுபிடிப்பது கடினம். அந்த அளவிற்கு கடுமையாய் உழைத்துள்ளனர். பெரியவனான பை ஆக நடித்த இர்பான் கானை விட, சிறுவனாக நடித்த சுராஜ் நடிப்பு நன்றாக இருந்தது. இந்த படத்தில் ஒன்றிரண்டு காதல் காட்சிகளும் உண்டு. ஒரு சில தேவை இல்லாத காட்சிகள்,ஒரு சில இடங்களில் வரும் லாஜிக் மிஸ்டேக்ஸ், சில நம்ப முடியாத காட்சிகள் தவிர படம் மிகவும் நன்றாக இருந்தது. அந்த காலத்திய பாண்டிச்சேரி, பை என்ற பெயர் ஏற்பட காரணம், சுராஜ் - சரவந்தி அகியோருக்கிடையான காதல், ரிச்சர்ட் பார்க்கர் என்ற பெயர் புலிக்கு வரும் கரணம் போன்ற சில சுவாரஸ்யமான காட்சிகளின் மூலம் நம்மை ஈர்க்கிறார்கள்.மத உணர்வுகளையும் மனித உணர்வுகளையும் மிருக குணங்களையும் ஒருங்கே சொல்ல முயன்று ஒரு பீல் குட் திரைப்படத்தை தந்துள்ளார் இயக்குனர் ஆங்-லீ.

இந்த படம் யான் மர்டேல் எழுதி 2001 ஆம் ஆண்டு வெளிவந்த லைப் ஆப் பை நாவலை கொண்டு எடுக்கப்பட்டது . இந்த படம் ஒரு சில ஆஸ்கார்களை வெல்லும் என்பது பலரின் எதிர்பார்ப்பு. எதற்கு கிடைக்கிறதோ இல்லையோ கிராபிக்ஸ் பணிக்காக கிடைக்கும். இதை 2டி யில் விட 3டியில் பார்த்தால் நன்றாக இருக்கும். நிச்சயம் ஒரு நல்ல அனுபவமாக இந்த படம் இருக்கும்.

0 comments: