விவசாயம்

நான் அடிப்படையில் விவசாய குடும்பத்தை சார்ந்தவன். தற்போது நான் தனியார் பிரிண்டிங் மேனேஜர் ஆக பணிபுரிகிறேன், எனது பெற்றோர் விவசாயம் செய்கிறார்கள். எனது பெற்றோரின் விருப்பத்திற்கு இணங்க வேலைக்கு செல்கிறேன்.ஏன் இதை சொல்கிறேன் என்றால் விவசாய பின்னணியில் இருந்து கொண்டு என் போன்றவர்கள் பலர் விவசாயம் செய்யாமல் வேறு வேறு வேலைகளுக்கு செல்கின்றனர்.
அதற்கு காரணங்கள் பல உண்டு. இன்றைய பொருளாதார சூழலில் மக்களுக்கு அதிக வருமானம் தேவைப்படுகிறது. அது விவசாயத்தில் கிடைக்காது என்ற எண்ணம் தான் காரணம். எந்த ஒரு தொழிலுலிம் இடர்பாடுகள் இல்லாமல் இல்லை. ஆனால் விவசாயத்தில் பல இடர்கள் உள்ளதால் அதை செய்யவே பலர் தயங்குகின்றனர். இன்றைய விவசாய குடும்ப பெற்றோர்கள் தங்களோடு இந்த கஷ்டம் போகட்டும் எண்ணத்திலும் தன் பிள்ளைகள் வெளியில் வேலைக்கு சென்றாவது நல்லபடியாக இருக்கட்டும் என்றும் தங்களோடு விவசாய நெறிமுறைகளை நிறுத்திக்கொள்கின்றனர். தற்போதைய சந்ததியினர் அதை அறிந்து கொள்ள விளைவதும் இல்லை.
ஏன் இந்த நிலை.? பருவமழைகளை நம்பியே விவசாயம் நடக்கும் நம் நாட்டில் சுற்றுச்சூழல் மாற்றத்தால் எப்போது மழை வரும் போகும் என்று தெரியாத நிலை. கடனுக்கு வாங்கி விவசாயம் செய்யும் போது வெள்ளம், மழை பொய்ப்பு போன்றவற்றால் நட்டம் அடைந்து தற்கொலை செய்து கொள்ளும் சூழல் அதிகமாகி வருகிறது.
இன்றைய காலகட்டத்தில் அடுத்ததாக ஆட்கள் பற்றாக்குறை தான் விவசாயத்தின் மிகப்பெரிய சவால். உதாரணமாக எங்கள் பகுதியான திருப்பூர், கோவை பகுதியில் விவசாய வேலைகளுக்கு ஆட்கள் என்பது குதிரைகொம்பாக உள்ளது. விவசாய நிலங்களில் வேலை செய்வதை காட்டிலும் தொழிற்ச்சாலைகளில் வேலை செய்வதை சிறப்பாக எண்ணுகிறார்கள். அடுத்ததாக மத்திய அரசு செய்த அற்புத திட்டம் தேசிய ஊரக வேலை வாய்ப்பு திட்டம். ஒட்டு மொத்தமாக விவசாயதிற்கு ஆப்பு வைத்த திட்டம். இன்றைய ஆட்கள் தான் தொழிற்சாலைகள் செல்கின்றனர். பழைய ஆட்கள் மூலமாக நடந்து வந்த கொஞ்ச நஞ்ச விவசாயமும் அம்பேல்.
ஆட்கள் பற்றாக்குறையை சமாளிக்க இயந்திரங்கள் வந்தாலும் அவற்றிற்கு வாடகை கொடுத்து கட்டுபடியாகாத நிலை. பல ஏக்கர் நிலம் வைத்து இருப்பவர்க்கே இயந்திரங்கள் உதவும். ஒன்று இரண்டு ஏக்கர் வைத்துள்ளவர்களுக்கு ..???.
சீனா போன்ற ஒப்பிடுகையில் நமது நாட்டில் ஒரு ஏக்கருக்கான உற்பத்தி என்பது மிகவும் குறைவே. அதற்கு காரணம் பசுமைப்புரட்சி. நமது பசுமை புரட்சி திட்டங்கள் ரசாயனங்களை அறிமுகம் செய்து நிலத்தை கெடுத்து உற்பத்தியை குறைத்துவிட்டன. வெளிநாட்டு ரசாயன உர நிறுவனங்கள் மேல் தான் அரசுக்கு அக்கறையே தவிர. விவசாயத்தின் மேலோ, நாட்டு மக்கள் மேலோ அல்ல. ரசாயன மருந்துகளின் விளைவுகள் கண்கூடாக கண்ட பிறகும் அதை இன்னும் அரசு ஆதரிப்பது விளங்கவே இல்லை...
ஒரு விவசாயி இயந்திரங்கள் மூலம் உழவு செய்து, களைகொல்லி, பூச்சிக்கொல்லி மருந்துகள் அடித்து, உரம் இட்டு எல்லாம் செய்து விற்பனை செய்கையில். அவனுக்கு கிடைப்பது என்னமோ சொற்பம் தான். விவசாய பொருட்களுக்கு உரிய விலை என்பது எப்போதும் கிடைப்பதே இல்லை. அப்படி மக்களிடம் தான் குறைவாக சென்று சேர்கிறதா என்றால் அதுவும் இல்லை. இடையில் புகுந்து சில மணிகளில் பலமடங்கு லாபம் பார்க்கும் இடைத்தரகர்கள் தான் லாபமடைகின்றனர். விவசாயத்தில் சம்பந்தமே இல்லாதவர்கள் கூட விவசாய பொருட்களை வாங்கி இருப்பு வைத்து அதிக விலைக்கு விற்று லாபமடைகின்றனர். கார்பரேட் கம்பனிகள் கூட இதில் இறங்கி செயல்படுகின்றன. இருப்பு வைக்கவோ, விலை கிடைக்கவோ முடியாத விவசாயிகள் கொடுத்ததை வாங்கி கொள்ள கூடிய நிலைமை-.



------------ இன்னும் விளையும்

2 comments:

  1. தாங்கள் இன்று விவசாயத்தில் நடக்கும் பிரச்சனைகளை எதார்த்தமாக கூறியுள்ளீர்கள்.

    இதர்கான தீர்வையும்,நாட்டின் ஒட்டுமொத்த விடிவையும் கீழ் காணும் கட்டுரைகளில் விளக்கியுள்ளோம்.

    1.விவசாயிகள்:நாட்டின் சட்டபூர்வ கொத்தடிமைகள்! பாகம் -1 http://suraavali.blogspot.com/2011/10/1.html


    2.விவசாயிகள்: நாட்டின் சட்டபூர்வ கொத்தடிமைகள்! பாகம் 2 http://suraavali.blogspot.com/2011/11/2_10.html


    3.விவசாயிகள்:நாட்டின் சட்டபூர்வ கொத்தடிமைகள்! பாகம் -3 http://suraavali.blogspot.com/2011/11/3.html

    4.விவசாயிகள் நாட்டின் சட்டபூர்வ கொத்தடிமைகள்-4 http://suraavali.blogspot.com/2011/11/4.html

    ReplyDelete
  2. மிக்க நன்றி சூறாவளி. மாறும் நிச்சயம் எல்லாம் மாறும்.

    ReplyDelete