சினிமாவும் நானும்

எனது சிறு வயதில் நான் திரைப்பாடல்களோ, திரைப்படமோ அதிகம் கேட்டது இல்லை ஏனென்றால் எங்கள் வீட்டில் மின்சாரம் அப்போது இல்லை. பாட்டரியில் இயங்கும் பிலிப்ஸ் ரேடியோ ஒன்று மட்டும் இருந்தது. அப்போது எப்.எம் கள் இல்லாத காலகட்டம் அதனால் கோவை வானொலி, திருச்சி வானொலி நிலைய நிகழ்ச்சிகள் மட்டும் கேட்டதுண்டு. அதில் சினிமா பாடல்கள் ஒலிபரப்பு என்பது குறைவே, ஆனாலும் நாடகங்கள், சினிமா ஒலிச்சித்திரம் தவறாமல் கேட்பேன்.

பள்ளி விடுமுறையில் அருகில் இருக்கும் உறவினர் வீட்டில் படம் பார்க்க செல்வோம் , வெள்ளி, சனி, ஆகிய நாட்களில் இரவில் தூர்தர்ஷனில் திரைப்படம் போடுவார்கள் அதை பார்போம், பல நாட்கள் தூங்கி விடுவதுண்டு. ஒளியும் ஒலியும் நிகழ்ச்சி ஒன்றில் மட்டும் நான் பாடல்கள் பார்த்ததுண்டு. சில வருடங்களில் வீட்டிற்கு மின் இணைப்பு வந்தது, சில மாதங்களுக்கு பிறகு டி.வி வந்தது ஆனாலும் பாடல் கேட்பது ஒரு விருப்பமானதாக இருந்ததில்லை. திரைப்படம் ஞாயிறு மட்டும் பார்ப்பேன்.நானும் உயர்நிலையில் படிக்கும் போது பாட்டு புத்தகங்கள் நண்பர்கள் வாங்கி சினிமாவில் படுவதுபோல் பாடிக்கொண்டு இருப்பார்கள். பாட்டு புத்தகம் வாங்குவது ஒரு போட்டி எந்த புதிய திரைப்படம் வந்தாலும் ஓடி தேடி முதலாவதாக வாங்கினால் அவன் பெரிய ஆள். இந்த வகையில் நானும் வாங்கி சேகரிக்க ஆரம்பித்தேன். அதை வாங்கி ஒருமுறை படிப்பதோடு சரி. அதை திரும்ப படிக்க தோன்றியதில்லை.

கேபிள் இணைப்பு வீட்டிற்கு வாங்கியதும் சினிமா பார்ப்பது அதிகமானது, மேல்நிலை படிப்பு சென்றதும் கொஞ்சம் கொஞ்சமாக பாடல்கள் கேட்பது விருப்பமான ஒன்றாக மாறியது.அந்த கால கட்டங்களில் பல நாட்கள் பள்ளியை கட் செய்துவிட்டு பல சினிமாக்கள் சென்றதுண்டு. ஆனாலும் பாடலாசிரியர் , இசையமைப்பாளர், இயக்குனர் போன்ற விஷயங்கள் கவனிப்பதில் எனக்கு ஆர்வம இருந்ததில்லை, ஆர்வம இருந்ததில்லை என்பதை விட தெரிந்ததில்லை. கல்லூரி சென்ற பிறகு பல நண்பர்கள் தொடர்பு, வெளி உலக அனுபவங்கள், கணினி, இணையம் போன்றவை சினிமா பற்றிய எனது பார்வையை மாற்றிவிட்டன.

எனக்கு ஆங்கில படங்கள் பார்ப்பது பிடிக்கும் அவர்களின் விசுவல், கிரியேடிவ் காரணமாக அவை எனக்கு பிடித்து விட்டன. நான முதன் முதல் பார்த்த ஆங்கில படம் டைட்டானிக். நான் பார்த்த முதல் ஹிந்தி படம் ஷாருக்கின் பாஷா. இன்று நான் சினிமா பார்ப்பது குறைந்து விட்டது. இருந்தாலும் சினிமாக்களை பற்றி ப்ளாக்கில் அறிந்து கொள்கிறேன். உலக சினிமாக்கள் பற்றி தெரியாத நான் ஜாக்கி, மற்றும் பட்டர்பிளை சூர்யா அவர்களின் வலைப்பூக்களின் மூலம் அவற்றை அறிந்துகொள்ள வாய்ப்பு கிடைத்தது.
இன்னும் சினிமாக்களின் பல முகங்கள் நான் அறிந்திராதாவை. முடிந்தவரை அறிந்து கொள்கிறேன்.
------------------------------------------------------------------------------------------


டிஸ்கி:
இந்த பதிவு என்னோட சினிமா அனுபவங்கள்தான். வேறு ஒன்றும் பெரிதாக தெரியாது . ஒரு சினிமா ரசிகன் மட்டுமே நான்.

1 comment:

  1. பகிர்வுக்குப் பாராட்டுக்கள்.

    ReplyDelete